search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளநோட்டு பறிமுதல்"

    • வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • வீட்டிற்கு எப்போது வருகிறார், போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகார் அளித்தேன்.

    கோவை:

    குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஹரேந்திரன் என்ற எர்வின் எவின்ஸ் (வயது49). இவர் ஓமியோபதி டாக்டர் எனக் கூறி கோவை வெள்ளலூர் ராமசாமி கோனார் நகரில் உள்ள தங்கராஜ் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    இந்த நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள தலையோலபறம்பு போலீசார் கொள்ளை வழக்கு தொடர்பாக எர்வினை கைது செய்து அழைத்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் தங்கராஜ், கைதான எர்வின் எவின்ஸ் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.

    சோதனையின் போது வீட்டில் போலி தங்க கட்டிகள், மற்றும் ஒரு புறம் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள், மற்றும் 3 ரப்பர் ஸ்டாம்பு, ஒரு துப்பாக்கி (ஏர்கன்) ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு எர்வின் எவின்ஸ் வாடகைக்கு வந்தார். அவரிடம் உங்களது மனைவி, குழந்தைகள் எங்கே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பின்னர் வருவார்கள் என்று கூறினார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை காணவில்லை என என்னிடம் கேட்டார். அதற்கு நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டியது தானே என்றேன்.

    அதற்கு அவர் வேண்டாம் என கூறிவிட்டார். மேலும் வீட்டிற்கு எப்போது வருகிறார், போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகார் அளித்தேன்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதனையடுத்து போத்தனூர் போலீசார் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட போலி தங்க கட்டிகள் துப்பாக்கி ஒரு பக்கம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எர்வினுக்கு எப்படி வந்தது? என விசாரித்து வருகிறார்கள். எர்வின் போலி டாக்டராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். எனவே கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ள அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • சென்னையை சேர்ந்த ஒரு கும்பல் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட இடுக்கியை சேர்ந்த 2 பேரை பயன்படுத்தி வந்துள்ளனர்.
    • 20 கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு தனியார் வங்கியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 500 ரூபாய் கள்ளநோட்டு 2 வந்தது. இதைபார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் இதுகுறித்து பீர்மேடு போலீசில் தகவல் தெரிவித்தனர்.

    டி.எஸ்.பி குரியன்ஜேக்கப் தலைமையிலான போலீசார் வங்கிக்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து கள்ளநோட்டை மாற்றியது யார் என ஆய்வு செய்தனர். அப்போது வண்டிபெரியாறு பகுதியை சேர்ந்த சிபின்ஜேக்கப்(28) என்பவர்தான் கள்ளநோட்டுகளை மாற்றியது தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் கள்ளநோட்டுகள் கிடைத்ததாகவும், அதனை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் புழக்கத்தில் விட்டதாகவும் தெரிவித்தார். அவரது வீட்டில் சோதனை செய்தபோது 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 20 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    சென்னையை சேர்ந்த ஒரு கும்பல் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட இடுக்கியை சேர்ந்த 2 பேரை பயன்படுத்தி வந்துள்ளனர். ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் கள்ளநோட்டுகள் கொடுத்துள்ளனர். அதனை வாங்கி புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர். அதன்படி இடுக்கி மாவட்டத்தில் 20 கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. 20 கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    இந்த கும்பலில் தொடர்புடைய நபர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இடுக்கி மாவட்ட போலீசார் மூலம் சென்னை காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து கள்ளநோட்டு கும்பலை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    • தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.
    • போலீசார் டைல்ஸ் கடை உரிமையாளர் கோகுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் முன்பாக உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் 8 எண்ணிக்கையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை செலுத்தினார். இது குறித்து வங்கியின் நோடல் அலுவலர் கார்த்திக் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் வங்கிக்கு செலுத்தப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகள் குறித்து வங்கி நிர்வாகத்தினர் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்தனர். கள்ள நோட்டுகளில் சீரியல் எண்கள் மாற்றப்பட்டுள்ளதை வைத்து வங்கி அதிகாரிகளால் அவை கள்ள நோட்டுகள் என உறுதி செய்யப்பட்டது. இந்த நோட்டுகளை செலுத்தியவர் தேவாரம் மெயின் ரோட்டில் டைல்ஸ் கடை நடத்தி வரும் கோகுல் என தெரிய வந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து போலீசார் டைல்ஸ் கடை உரிமையாளர் கோகுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்ததும் கோகுல் தலைமறைவானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பத்தில் ஒரு வீட்டில் கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் சிக்கினர். தற்போது வங்கி ஏ.டி.எம்.மில் தொழிலதிபரே 500 ரூபாய் கள்ள நோட்டுகளை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டுகளை அச்சடிக்க விரும்பினார்.
    • ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற சிரமம் என்பதால் அதனை அச்சடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கே.கோட்டூரை சேர்ந்தவர் கோபால் (வயது 41) 7-ம் வகுப்பு வரை படித்துள்ளார். சில ஆண்டுகள் பெங்களூரில் உள்ள அச்சகத்தில் வேலை செய்து வந்தார்.

    தற்போது வார சந்தைகளுக்கு சென்று டீ விற்று வருகிறார். போதைக்கு அடிமையான கோபால், எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி என்று யூடியூப் வீடியோக்களை பார்த்து வந்தார்.

    கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டுகளை அச்சடிக்க விரும்பினார்.

    பெங்களூரு சென்று கலர் பிரிண்டர், தடிமனான வெற்று பாண்ட் பேப்பர்கள், கலர்கள், பச்சை கலர் நெயில் பாலிஷ் வாங்கி வந்தார். 6 மாதங்கள் வீட்டில் ரகசியமாக ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகளை அச்சடித்து வந்தார். ரூ.500 நோட்டுகளில் பாதுகாப்பு இழைக்கு பச்சை நிற நெயில் பாலிஷ் பூசினார்.

    அச்சடிக்கப்பட்ட இந்த நோட்டுகளை வாரச்சந்தையில் புழக்கத்தில் விட்டு வந்தார். கோபால் வழக்கமாக வார சந்தைகளில் டீ விற்பதால் அவர் கொடுத்த ரூபாய் நோட்டுகள் மீது கடைக்காரர்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.

    இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோபால் வீட்டில் அச்சடிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளை சந்தைகளில் புழக்கத்தில் விடுவதை தொடர்ந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஊரில் உள்ள காய்கறி கடையில் ரூ.500 கொடுத்து ரூ.50 மதிப்புள்ள காய்கறிகளை வாங்கினார்.

    கோபால் கொடுத்த 500 ரூபாய் நோட்டின் மீது கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து பலமனேர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோபால் கொடுத்த 500 ரூபாய் நோட்டை வாங்கி பார்த்தார். அது போலி ரூபாய் நோட்டு என தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோபாலை கைது செய்து, அவரது வீட்டில் இருந்து ரூ.8,200 மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள், பிரிண்டர் மற்றும் வெற்று வெள்ளை காகிதங்களை பறிமுதல் செய்தனர்.

    கோபால் கடந்த 6 மாதங்களாக எவ்வளவு கள்ள நோட்டுகளை அச்சடித்தார் எவ்வளவு கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டு உள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற சிரமம் என்பதால் அதனை அச்சடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

    கேரளா மாநிலம் திருச்சூரில் கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #FakeCurrency
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம், கொப்பம் ஆகிய பகுதிகளில் செர்புழச்சேரி இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 2 முறை நடத்திய சோதனையில் ரூ.70 ஆயிரம் மற்றும் ரூ.82 ஆயிரம் கள்ளநோட்டுக்கள் சிக்கியது.

    இதனை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கள்ளநோட்டு சிக்கியது. கள்ளநோட்டு தயாரிக்கும் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் திருச்சூர் காட்டூர் தோட்டப்பள்ளியை சேர்ந்த மணி (வயது 45) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டு பறிமுதல் செய்தனர்.

    மேலும் கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், பிரிண்டர், இங்க், காகிதங்களை பறிமுதல் செய்தனர். மணியிடம் நடத்திய விசாரணையில் அவரது நண்பரான சதானந்தம் (46) என்பவரும் கள்ளநோட்டு அச்சடிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரது வீட்டிலும் சோதனை செய்தபோது அங்கு ரூ.40 ஆயிரம் இருந்தன. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளநோட்டு அச்சடித்த மணி மற்றும் சதானந்தம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இது குறித்து செர்புழச்சேரி போலீசார் கூறும்போது, பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுக்கள் அனைத்தும் 2000 ரூபாய் நோட்டுகள். வங்கி அதிகாரிகளே திணறும் அளவுக்கு மிக நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டுள்ளது. பல நாட்கள் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டதால் பாலக்காடு, ஒற்றப்பாலம், பொள்ளாச்சி கிராம பகுதி மற்றும் கோவை எல்லையோர பகுதிகளில் அதிகம் புழக்கத்தில் விட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே பொதுமக்கள் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளி நபர்களிடம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். நன்கு தெரிந்த நபர்களிடமே 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். #FakeCurrency

    ஆம்பூர், ஜோலார்பேட்டை பகுதியில் ரூ.2 ஆயிரம் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து சப்ளை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வந்த வாலிபர் ரூ.2,000 நோட்டை கொடுத்து சிகரெட் பாக்கெட் வாங்கினார்.

    அந்த நோட்டை பார்த்ததும் சந்தேகம் அடைந்த கடைக்காரர் அது குறித்து கேட்டுள்ளார். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார்.

    கடைக்காரர் சத்தம் போடவே அங்கு இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவரது பாக்கெட்டை பார்த்த போது அதில் 2,000 ரூபாய் நோட்டுகள் 11 இருந்தது.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (வயது28) என்பது தெரியவந்தது. ஜோலார்பேட்டை நகர அ.ம.மு.க. இளைஞர் பாசறை செயலாளராக உள்ளார். அவரிடம் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் எடுத்து இருப்பது தெரியவந்தது.

    ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டியை சேர்ந்த அ.ம.மு.க. நகர துணை செயலாளர் அலெக்சாண்டர் (35). ரூ.2 ஆயிரம் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

    அலெக்சாண்டர்-சதாம்உசேன்

    இதையடுத்து ஆம்பூர் போலீசார் அலெக்சாண்டர் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். அங்கு ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுக்கும் எந்திரம் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

    இருவரும் சேர்ந்து வாணியம்பாடி வார சந்தையில் ரூ.40 ஆயிரம் ஜெராக்ஸ் நோட்டுகளை மாற்றியுள்ளனர்.

    ரூ.40 ஆயிரம் ஜெராக்ஸ் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தால் அலெக்ஸ் சாண்டர் ரூ.4 ஆயிரம் கமி‌ஷன் கொடுத்துள்ளார். இவர் பல ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆம்பூர், ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கள்ளநோட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட பெண் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கடன் தொல்லையால் கள்ளநோட்டு அச்சு அடித்ததாக கூறியுள்ளார். #FakeCurrency #arrest

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் வனிதா (வயது 30).

    இவர் நேற்று முன்தினம் அமைந்தகரை மேத்தாநகர் ரெயில்வே காலனி 3-வது தெருவில் உள்ள மருந்துக் கடையில் 2000 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்றார்.

    அப்போது மருந்து கடை ஊழியர்களும், அக்கம் பக்கத்தினரும் வனிதாவை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    அமைந்தகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வனிதாவை கைது செய்து விசாரணை நடத்தினார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கொளத்தூரை சேர்ந்த சத்தியலட்சுமி என்ற பெண்ணையும் கைது செய்தனர்.

    சத்தியலட்சுமி வீட்டில் கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பயன்படுத்தி கள்ளநோட்டு தயாரித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.36 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கள்ளநோட்டு வழக்கில் கைதான வனிதா போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-

    நானும் சத்யலட்சுமியும் கடந்த 2006-ம் ஆண்டு அண்ணா நகரில் உள்ள துணிக் கடை ஒன்றில் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம்.

     


    பிறகு சத்யலட்சுமி திருமணம் முடிந்து மாதவரம் பகுதியில் குடியேறிவிட்டார். அதன்பிறகு அவர் வேலைக்கு வரவில்லை. அவரது கணவர் அமெரிக்காவில் ஷிப்பிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அடிக்கடி நாங்கள் இருவரும் சந்தித்து பேசுவது வழக்கம்.

    நான் பின்னர் சேலை, பெட்ஷீட் மற்றும் தலையணை வியாபாரம் செய்து வந்தேன். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. கடன் பிரச்சினையால் தவித்து வந்தேன்.

    எனது தாய் அண்ணா நகர் சாந்தி காலனி பகுதியில் தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வருகிறார். போதிய வருமானம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தோம்.

    இந்த நிலையில் தான் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யூடியூப் மூலம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் வீடியோ ஒன்றை பார்த்தேன்.

    இதுகுறித்து சத்யலட்சுமியிடம் கலந்து ஆலோசித்து அவரிடம் இருந்து பண உதவி பெற்று ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து நோட்டு அச்சடிக்கும் மெஷின்கள் வாங்கினேன்.

    பின்னர் சத்யலட்சுமி மூலம் அவர் வசித்து வரும் வீட்டின் அருகில் 18-வது குறுக்கு தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக குடியேறினேன்.

    கடந்த 10 நாட்களாக ரூபாய் நோட்டு அச்சிட்டு வந்தேன். தினமும் நானும் சத்யலட்சுமியும் ஆளுக்கொரு சூப்பர் மார்க்கெட் கடைக்கு சென்று பணத்தை மாற்றி செலவு செய்து வந்தோம்.

    நேற்று முன்தினம் மேத்தா நகர் மெடிக்கல் கடையில் நோட்டை மாற்றும் போது நான் சிக்கிவிட்டேன்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார். #FakeCurrency #arrest

    கேரளாவில் லட்சக்கணக்கில் கள்ளநோட்டு அச்சடித்ததாக மலையாள டி.வி. நடிகை சூர்யா உள்பட கைதானவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை தொடங்கியுள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் இடுக்கியில் உள்ள சொகுசு பங்களாவில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் அதிரடி சோதனை நடத்தி அந்த வீட்டில் கள்ள நோட்டு அச்சிட்டதாக மலையாள டி.வி. நடிகை சூர்யா, அவரது தாயார் ரமாதேவி, தங்கை சுருதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இந்த கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக லியோ, ரவீந்திரன், கிருஷ்ணகுமார், வினு, சன்னி ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களிடம் நடத்திய விசாரணையில் பாலக்காட்டை சேர்ந்த பிஜூ என்ற போலி சாமியாரின் தொடர்பு நடிகை சூர்யாவுக்கு கிடைத்து உள்ளது. அவர் மூலமே கள்ள நோட்டு கும்பல் அவருக்கு அறிமுகமாகி உள்ளது. அவர்கள் உதவியுடன் தனது வீட்டில் நடிகை சூர்யா கள்ள நோட்டுகளை அச்சடித்து உள்ளார்.

    தற்போது கைது செய்யப்பட்ட அனைவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய போலி சாமியார் பிஜூ மற்றும் கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் உள்ளவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையில் இந்த கள்ள நோட்டு வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (ஐ.என்.ஏ.) விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த அமைப்பின் அதிகாரிகள் கேரளா வந்தனர். அவர்கள் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை பகுதியில் தங்கள் விசாரணையை தொடங்கினார்கள். நடிகை அச்சடித்த கள்ள நோட்டுகள் தமிழகம் உள்பட வெளிமாநிலங்களிலும் புழக்கத்தில் விட்டதாக கூறப்படுகிறது. அதுபற்றியும் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் சூர்யா நடிகை என்பதால் அவர் கள்ள நோட்டுகளை சினிமா துறையிலும் புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால் அதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
    கேரளாவில் கள்ளநோட்டு வழக்கில் கைதான டி.வி. நடிகைக்கு போலி சாமியாருடன் தொடர்பு உள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

    இதைதொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இடுக்கி பகுதியில் கள்ள நோட்டுகளுடன் வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கேரள டி.வி. நடிகை சூர்யாவிடம் இருந்து அந்த கள்ள நோட்டுகளை வாங்கியதாக தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து கொல்லத்தில் உள்ள நடிகை சூர்யாவின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. நடிகை சூர்யா, அவரது தாய் ரமாதேவி, சகோதரி சுருதி ஆகியோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    கள்ள நோட்டு அச்சடிப்பு கும்பலின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது பற்றியும் அவர்களுக்கு உதவியவர்கள் பற்றியும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை சூர்யாவுக்கு போலி சாமியார் ஒருவருடன் தொடர்பு இருக்கும் திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கைதான வினு, சன்னி

    அந்த சாமியார் மூலமே சூர்யாவுக்கு கள்ள நோட்டு கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதன் பிறகே அவர் தனது வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழகத்தில் விட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அந்த சாமியார் பற்றியும் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கள்ள நோட்டு அச்சடிக்க கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்பட நவீன கருவிகளை நடிகைக்கு வினியோகம் செய்ததாக கஞ்சியூர் பகுதியை சேர்ந்த வினு (வயது 48), சன்னி (42) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவையில் ரூ.60 லட்சம் கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலில் ஒருவரான கிதர் முகமதுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வியாபாரிகள் போல நடித்து கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக தெரிவித்துள்ளார். #FakeCurrency
    கோவை:

    கோவையில் பிடிபட்ட கள்ளநோட்டு கும்பலின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சாய்பாபா காலனியை சேர்ந்த ஆனந்த் (வயது 31), வடவள்ளியை சேர்ந்த கிதர் முகமது(68) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கும்பல் தலைவனான காரமடையை சேர்ந்த சுந்தர் (38) எர்ணாகுளத்தில் தலைமறைவாக இருக்கிறார். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.

    இக்கும்பல் கடந்த 2 மாதங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை அச்சடித்து 4 மாநிலங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு கள்ளநோட்டுகளை அச்சடித்து கொடுத்ததாக தகவல் வெளியாகியது.

    இதைத்தொடர்ந்து கிதர் முகமதுவிடம் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், கியூ பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர். கோவை-கேரள எல்லையை ஒட்டிய மலை கிராமங்களில் சுந்தர், கிதர் முகமது ஆகியோர் அதிக நாட்கள் இருந்துள்ளனர். எனவே அங்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளை புழக்கத்தில் விட்டார்களா? என விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த கும்பல் வியாபாரிகள் போல நடித்து கள்ள நோட்டுகளை மோட்டார் சைக்கிள்களில் எளிதாக கடத்தி சென்று புழக்கத்தில் விட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு கும்பல் கள்ள நோட்டுகளை கொடுத்து ஆடுகளை வாங்கிச் சென்ற சம்பவம் அடிக்கடி நடந்தது. இச்சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கோவையில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஏஜெண்டுகள் யார்-யார்? என்பது குறித்து கிதர் முகமதுவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கிடைத்த தகவல்களை வைத்து ஒரு பட்டியல் தயாரித்து விசாரணை நடத்தப்பட்டது.

    இவர்கள் போலீசில் பிடிபட்ட தகவலறிந்து ஏஜெண்டுகள் செல்போனை ‘சுவிட்ச்-ஆப்’ செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்கள் கடைசியாக யார்- யாரிடம் பேசினார்கள்? என பட்டியல் சேகரித்து விசாரணை நடந்து வருகிறது.

    மத்திய அரசு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. அதன்பிறகு இந்த கும்பல் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் அடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். இதற்காக சுந்தர் குஜராத்தில் இருந்து நவீன வெள்ளை காகிதங்களை வரவழைத்து கள்ளநோட்டுகளை அச்சடித்துள்ளனர்.

    சுந்தர் மீது கோவை போத்தனூர், சரவணம்பட்டி, வெரைட்டிஹால் போலீஸ் நிலையங்கள், சி.பி.சி.ஐ.டி. பிரிவு மட்டுமல்லாது கேரளாவிலும் பல்வேறு வழக்குகள் உள்ளது. இவருக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் கும்பல் மற்றும் ஹவாலா கும்பலுடன் தொடர்பு உள்ளது.

    கோவை பீளமேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள பழைய 1000 ரூபாய் நோட்டு கண்டுகளை நேற்று போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் நாமக்கல்லை சேர்ந்த தஸ்தா கீர்(40) என்பவர் தலைமையில் காரில் வந்த 6 பேர் கும்பல் இந்த நோட்டுகளை மாற்றுவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.

    பழைய ரூபாய் நோட்டுகளை தற்போது எங்குமே மாற்ற முடியாது என்ற நிலையிலும் அவர்கள் எதற்காக கொண்டு வந்தார்கள்? என்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து கள்ள நோட்டுகளை வாங்கிச் செல்வதற்காக வந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு சாய் பாபா காலனியில் கள்ள நோட்டு கும்பல் பிடிபட்டது தெரியாமல் இந்த கும்பல் பழைய நோட்டுகளை கொண்டு வந்திருக்கலாம் எனவும், கோவை வந்த பிறகு தகவல் கிடைக்கவே அவர்கள் தப்பிச்சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #FakeCurrency
    ×